ஒரு மகனின் தகப்பன்
நான் வழக்கமாக எங்கள் வீட்டு வராந்தாவில் என்னுடைய சொப்புகளை பரப்பி விளையாடுவேன். அங்கே நான் சிருஷ்டித்த கதைகள் ஏராளம் கதாபாத்திரங்கள் ஏராளம். பின்னாட்களில் அதே சாயலொத்த சில கதைகளையும், கதாபாத்திரங்களையும் டிஸ்னி மற்றும் சில கார்டூன் சேனல்களில் பார்த்து வியந்திருக்கிறேன், ஏனென்றால் அவற்றின் பல கதைகளும் கதாபாத்திரங்களும் நான் கற்பனையில் விளையாடியவைக்கு ஒத்திருந்தன. நான் அவற்றுடன் பல இரவுகளில் கனவுகளில் சஞ்சரிதிருக்கிறேன், நான் வைத்திருப்பது சின்ன குப்பிகளானாலும் என் கற்பனையில் அவைகளுக்கு நான் பல வடிவங்கள் புனைதிருந்தேன். பின்னாட்களில் நான் கனவுகளில் என் நாட்களை தொலைத்தமைக்கு இதுவும் காரணமாய் இருக்கலாம்.
பல நாட்கள் இவைகளுடன் விளையாடி வந்த எனக்கு பின் வந்த சில நாட்களில் இன்னொரு பொருள் மீது தீரா ஆர்வம் வந்தது, அதற்கு காரணமாய் அமைந்தது எங்கள் அருகாமை வீட்டில் புதிதாய் குடிவந்த அந்த குடும்பம். எங்கள் வீடு சற்று மேடானது அதனால் எங்கள் வராந்தாவில் இருந்து பார்த்தால் எங்கள் அருகாமை வீட்டின் சுற்றுசுவரின் உள்ளே பார்க்கலாம். ஒரு நாள் வழக்கம் போல சொப்புகளையும் குப்பிகளையும் வைத்து விளையாடி கொண்டிருந்த சமயம் எனக்கு “டிர்ர்ர்ர்...டிர்ர்ர்ர்...” என ஒரு சத்தம் பக்கத்தில் கேட்டது, நான் எட்டி பார்த்த சமயம் என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை, தன்னிச்சையாக ஒரு சிறிய கார் பக்கத்து வீட்டு வராந்தாவில் ஓடி கொண்டிருந்தது.! அது முன், பின், வலது, இடது என சுற்றி கொண்டு என்னை மேலும் மேலும் ஆச்சர்யதுக்குள்ளாக்கியது. சற்று நேரத்திற்கு பின்னால் அந்த வீட்டு சிறுவன் கையில் ஒரு விசையுடன் அந்த காருக்கு பின்னால் ஓடி வந்தான். பின்னர் வந்த நாட்களில் என் சொப்புகளும் குப்பிகளும் தனிமயாக்கப்பட்டன, நான் அந்த காரையும் அதை இயக்கும் அந்த சிறுவனையும் வேடிக்கை பார்ப்பது வழக்கமாயிற்று.
கன்னியாகுமரி மாவட்டதில் வாவுபலி பொருட்காட்சி என்றால் மிகப்பிரபலம். நாங்கள் ஒரு சனிக்கிழமை மாலையில் பொருட்காட்சிக்கு போக தீர்மானித்தது இருந்தோம், எங்களுக்கு பொருட்காட்சி என்றால் மிகப்பிரியம் காரணம் என் தந்தை எங்களுக்கு பல விளையாட்டு சாமான்கள் வாங்கி தருவார். இந்த பொருட்காட்சி எனக்கு மிகவும் எதிர்பார்ப்பான ஒன்றாக இருந்தது காரணம் எப்படியாவது அந்த ரிமோட் காரைபோல ஒன்றை இந்த பொருட்காட்சியில் வாங்கி விடவேண்டும் என்றிருந்தேன். பொருட்காட்சி திடலில் என் தகப்பனார் விளையாட்டு பொருட்களை வாங்க முனைந்த போது நான் ஒன்றும் வேண்டாம் என சொல்லி ஒவ்வொரு கடையாக அந்த காரை தேடி கொண்டு வந்தேன். கடைசியில் அந்த சிகப்பு நிற கார் ஒரு கடையில் இருந்து என்னை வா வா என அழைத்து கொண்டு இருந்தது, இன்னும் என்னுடைய ஆவலை அதிகமாக்கும் வண்ணம் அந்த கடைக்காரர் என்னை பார்த்தவண்ணம் அந்த காரை அங்கும் இங்கும் அதன் ரிமோட்டால் இயக்கி காட்டினார். நான் என அப்பாவின் வேட்டியை இழுத்து அந்த காரை காட்டினேன், என் அப்பா அது வேண்டாம் எனக்கு அவர் வேறு பல சொப்புகளை வாங்கி தருவதாக சொன்னார். நான் அதுதான் வேண்டும் என அடம்பிடித்து ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்தேன். பின்பு அவர் என்னை இழுத்து கொண்டு அந்த கடைக்கு சென்று அந்த காரின் விலையை கேட்டார், கடைக்காரர் ரூ.60 என்றார், அப்போதே எனக்கு தெரிந்து விட்டது என்னக்கு அந்த கார் எட்டாகனி என்று. ஏனென்றால் என் அப்பா எங்கள் பொருட்காட்சிக்கு போட்ட பட்ஜெட் ரூ.50.
பின்பு பல நாட்கள் நான் அந்த காரை நினைத்து அழுதுகொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு என் அப்பாவிடம் என் மகனுக்கு அதே போல ஒரு கார் வாங்கி தர போவதாக சொல்லிகொண்டிருந்தேன். அது மட்டுமல்லாது அதை ஒரு லட்சியமாக மனதிலேயே வைத்திருந்தேன்.
இன்று 2011. நான் என் மனைவி மகனுடன் சென்னையில் இருக்கிறேன், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன், என் மகனுக்கு ஆறு வயது. என்னை போலவே அவனும் ஒரு தனிமை விரும்பி. இன்று தீவுதிடல் பொருட்காட்சிக்கு போக முடிவுசெய்து புறப்பட்டுகொண்டிருக்கிறோம். என்னுடைய பல நாள் லட்சியம் இன்று நிறைவேற போகிறது! என் மகனை விட நான் ஆர்வமாக ஒவொரு கடையாக அந்த குறிப்பிட்ட காரை தேடிக்கொண்டு இருக்கிறேன். இதோ இங்கே இருக்கிறது அந்த கார், என் மகனை ஆசையாய் அழைத்து அந்த காரை காட்டி இது உனக்கு தான் எடுத்து கொள்கிறாயா? என்றேன். அவன் முகத்தை திருப்பி சற்று தள்ளி இருந்த Play Station 3 - யை காட்டி அதை அவனது நண்பன் வைத்திருப்பதாகவும் அதுதான் வேண்டும் என சொல்கிறான். நான் சற்று திகைத்து அதன் விலையை கேட்கிறேன்... கடைகாரர் ரூ. 19000.00 என்கிறார்(அது என் ஒரு மாத சம்பளம்!). மவுனமாக திரும்பி நடக்கிறேன் அழுதுகொண்டிருக்கும் என் மகனுடன்.
பின்னொரு நாள் என் மகன் என்னிடம் சொல்லி கொண்டிருக்கிறான் அவன் மகனுக்கு Play Station 3 வாங்கி தர போவதாக, இப்போது நான் என் அப்பாவை நினைத்து கொண்டிருக்கிறேன்.....

Superb Pranesh. Nice Scripting. Go ahead.
ReplyDeleteThanks Athir. It strengthen me more.
ReplyDeleteI will try my best.